கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்:ஒலிபெருக்கி நிலைய உரிமையாளர் பலி
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒலிபெருக்கி நிலைய உரிமையாளர் பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒலிபெருக்கி நிலைய உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒலிபெருக்கி உரிமையாளர்
கோவில்பட்டியை அடுத்துள்ள கீழபாண்டவர் மங்கலம், தெற்கு காலனியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அழகுராஜா (வயது 40). இவர் ஒலி-ஒளி பெருக்கி நிலையம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கோவில்பட்டியை அடுத்துள்ள சாலைப் புதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு வேலையை முடித்து விட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
கார் மோதியது
இனாம்மணியாச்சி விலக்கு அருகே மேம்பாலத்தின் நுழைவு வாயிலில் சென்று கொண்டிருந்த போது கோவில்பட்டியில் இருந்து வந்த கார் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அழகுராஜ் பலத்த காயமடைந்தார்.
தகவல் அறிந்ததும் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர்,
மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அழகுராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, எட்டையபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் ஜா.ராஜாமுகேஷ் (22) என்பவரை
கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.