கார்கள் மோதி விபத்து; 4 பேர் காயம்


கயத்தாறு அருகே கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள ஒட்டநத்தம் கிராமத்தை சேர்ந்த ராஜா, விஜயலட்சுமி (வயது 60), ஜோதிலட்சுமி (44) ஆகியோர் ஒரு காரில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். காரை ராஜா ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கோகுல் (22), அவரது நண்பர் மதுரை திருநகரைச் சேர்ந்த பிரவின் (22) ஆகிய இருவரும் நெல்லைக்கு மற்றொரு காரில் வந்து கொண்டிருந்தனர்.

கயத்தாறு அருகே கரிசல்குளம் விலக்கில் நாற்கர சாலையில் வந்தபோது, கோகுல் ஓட்டி வந்த கார் திடீரென நிலைதடுமாறி எதிரே ராஜா ஓட்டி வந்த கார் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பிரவின் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் காயம் அடைந்த ராஜா, விஜயலட்சுமி, ஜோதிலட்சுமி ஆகியோர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி திலீப், காசிலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


Next Story