மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; காயமடைந்த சிறுமி சாவு
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்த சிறுமி பரிதாபகமாக இறந்தார்.
குளச்சல்:
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காயமடைந்த சிறுமி பரிதாபகமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி தெற்கு வள்ளியாவிளையை சேர்ந்தவர் ஆண்டிநாடார். இவருடைய மகன் நவீன் (வயது 23). நவீன் தக்கலை அருகே ஒரு தனியார் கல்லூரியில் பி.இ.2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 30-ந்தேதி நவீன் உறவினர் ரமேஷ் என்பவரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ரமேஷின் மனைவி அஜிதா (37), அவரது மகள்கள் ரக்சனா (13), லாவனீஸ் (11) ஆகியோருடன் குளச்சல் பள்ளி முக்கு பூங்காவுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள், மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வெட்டுமடை பகுதியில் சென்றபோது அவர்களுக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று நவீன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தீவிர சிகிச்சை
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த நவீன் உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிறுமிகள் லாவனீஸ், ரக்சனா ஆகிய 2 பேரையும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், நவீன், அஜிதா குளச்சல் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிறுமி ரக்சனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிறுமி சாவு
இந்த விபத்து குறித்து நவீன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் காரை ஓட்டி வந்த பாலப்பள்ளம் படுவூரை சேர்ந்த இனிகோ சகாயராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ரக்சனா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.