சேத்தியாத்தோப்பு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி வேகத்தடை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


சேத்தியாத்தோப்பு அருகே    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி    வேகத்தடை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x

சேத்தியாத்தோப்பு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் வேகத்தடை அமைக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

கார் மோதல்

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நெல்லிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ஜெகன் (வயது 21). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஆனைவாரி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி நோக்கி வந்த கார் ஜெகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெகன் அந்த சமயத்தில் சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி அந்த வழியாக சென்ற மற்றொரு கார் மீது விழுந்ததோடு, அந்தகாரின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை மறியல்

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்கொல்லை, ஆனைவாரி கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆனைவாரி பஸ் நிறுத்தம் அருகே சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதாகவும், அங்கு வேகத்தடை அமைக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு போலீசார் மற்றும் விருத்தாசலம் நெடுஞ்சாலை துறை அதிகாரி வைத்திலிங்கம், சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வார காலத்துக்குள் அங்கு வேகத்தடை அமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதற்கிடையே விபத்தில் பலியான ஜெகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இந்த சம்வம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story