லாரி மீது கார் மோதியதில் அரசியல் கட்சி பிரமுகர் பலி
சபரிமலைக்கு வந்தபோது கந்திகுப்பம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆந்திர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பர்கூர்
சபரிமலைக்கு வந்தபோது கந்திகுப்பம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆந்திர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மச்சரளா நேரு நகரை சேர்ந்தவர் புல்லாரெட்டி (வயது 72). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர். இவரும், குண்டூர் மாவட்டம் கொப்பனூரை சேர்ந்த மட்டா வேணுபாபு உள்பட மொத்தம் 7 பேர் ஒரு காரில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு சபரிமலைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் வந்த கார் நேற்று அதிகாலை பர்கூர் அருகே கந்திகுப்பம் தனியார் பொறியியல் கல்லூரி மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி சாணிகொம்பு புல்லாரெட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தீவிர சிகிச்சை
மேலும் காரில் வந்த மட்டா வேணுபாபு, கார் டிரைவர் சிவா (45) ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் விரைந்து சென்று இறந்த புல்லாரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.