லாரி மீது கார் மோதல்; தொழிலாளி சாவு
எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தொழிலாளி
கோயம்புத்தூர் பனையடிப்பட்டியை சேர்ந்த மயில்சாமி மகன் விஜயன் (வயது 42). தொழிலாளியான இவரும், உறவினர்களான சந்தோஷ் (28), ஹரிகார்த்திக் (27) ஆகியோரும் நேற்று முன்தினம் காரில் திருச்செந்தூருக்கு வந்தனர். காரை டிரைவர் சுரேஷ்குமார் (35) ஓட்டினார்.
4 பேரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நேற்று காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
லாரி மீது கார் மோதல்
நேற்று மாலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள துரைசாமிபுரம் விலக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு உப்பு மூட்டைகள் ஏற்றி ெசன்ற லாரியை, கார் டிரைவர் முந்த முயன்றதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
ஒருவர் சாவு
இந்த கோர விபத்தில் விஜயன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் பலியான விஜயனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.