கார் மோதி மூதாட்டி பலி
கார் மோதி மூதாட்டி பலியானாா்.
ஈரோடு மேட்டுக்கடை அருகே உள்ள நத்தக்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மனைவி ருக்மணி (வயது 85). இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று, மீண்டும் நேற்று காலை பஸ்சில் மேட்டுக்கடை வந்தார். பின்னர், வீட்டிற்கு செல்வதற்காக ருக்மணி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி வந்த கார் எதிர்பாரதவிதமாக ருக்மணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ருக்மணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, ருக்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.