வேடசந்தூர் அருகே தி.மு.க. நிர்வாகியின் கார் டிரைவர் தற்கொலை
வேடசந்தூர் அருகே தி.மு.க. நிர்வாகியின் கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர் அருகே தி.மு.க. நிர்வாகியின் கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
டிரைவர் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோசுக்குறிச்சியை சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயி. அவருடைய மகன் ஆண்டிச்சாமி (வயது 20). இவர், வடமதுரை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பையன் என்பவரிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர், வேடசந்தூர் தாலுகா பாகாநத்தம் அருகே சின்னகுட்டியபட்டியில் உள்ள சுப்பையன் வீட்டின் மாடியில் ஒரு அறையில் தங்கியிருந்தார். இன்று காலை ஆண்டிச்சாமி, தான் தங்கியிருந்த அறையின் விட்டத்தில் கைலி மற்றும் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் காலையில் நீண்டநேரம் ஆகியும் ஆண்டிச்சாமி எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுப்பையனின் உறவினர்கள், ஆண்டிச்சாமி தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்கிகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பாக்கெட்டில் கடிதம்
இதுகுறித்து ஆண்டிச்சாமியின் தந்தை சாமிநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் அங்கு விரைந்து வந்தார். இதுதொடர்பாக எரியோடு போலீஸ் நிலையத்தில் சாமிநாதன் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ஆண்டிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஆண்டிச்சாமி அணிந்திருந்த டவுசர் பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அம்மா, அப்பா நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். ஐ லவ் யூ என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை கைப்பற்றி, ஆண்டிச்சாமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.