சென்னை கே.கே.நகர் டிரைவர் கொலை வழக்கு: போலீஸ் கையில் சிக்காமல், தினமும் இடத்தை மாற்றும் ஏட்டு செந்தில்குமார்
சென்னை கே.கே.நகர் கார் டிரைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான போலீஸ் ஏட்டு செந்தில்குமார், போலீஸ் கையில் சிக்காமல் இருக்க தினமும் இடத்தை மாற்றி தலைமறைவாக உள்ளார். ரவுடி ஐசக் என்பவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கார் டிரைவர் படுகொலை வழக்கு
சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரம், காமராஜர் தெரு, 5-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் ரவி (வயது 26). கார் டிரைவரான இவர், காலால் மிதித்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி, ஆமினி வேனில் எடுத்துச்சென்று, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகில் படாளம் போலீஸ் எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரித்து விட்டனர். இந்த படுகொலை சம்பவம் சென்னையை உலுக்கி விட்டது.
கார் டிரைவர் ரவியின் எதிர்வீட்டில் வசித்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார் தான் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. ரவுடி ஐசக் மற்றும் அவரது கூட்டாளிகள் துணையோடு, ஏட்டு செந்தில்குமார் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளார். கொலைக்கான காரணம் சாதாரணமானது. ரவியின் குழந்தை, செந்தில்குமார் வீட்டு அருகில் சிறுநீர் கழித்தது தொடர்பாக, ரவியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும், செந்தில்குமாரின் காதலி கவிதாவுக்கும் ஏற்பட்ட சண்டை பெரிதாகி விட்டது.
என்னை அடித்து விட்டாயா...
செந்தில்குமாரும், ரவியும் தினமும் இரவு வேளையில் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தும் அளவுக்கு நண்பர்கள்தான். ஆனால் குழந்தை சிறுநீர் கழித்தது தொடர்பாக ஏற்பட்ட சண்டை, ரவியும், செந்தில்குமாரும் நேருக்கு, நேர் மோதும் சூழ்நிலையை உருவாக்கி விட்டது. இந்த மோதலில் செந்தில்குமாரை, ரவி அடித்துவிட்டார். "போலீஸ்காரன், என் மீதே கை வைத்து விட்டாயா, உன்னை விட மாட்டேன்", என்று செந்தில்குமார் வெறியுடன் களம் இறங்கி விட்டார். ரவி இதை பெரிது படுத்தவில்லை.
அடிபட்ட புலி போல பதுங்கிய ஏட்டு செந்தில்குமார், ரவுடியான தனது நண்பர் ஐசக் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து, ரவியை அடித்து உதைத்தார். காலால் ரவியின் உயிர் நாடியில் எட்டி உதைத்ததில் ரவி இறந்து விட்டார். கொலை செய்யப்பட்ட ரவியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி எடுத்து சென்று எரித்து விட்டனர். சிறுமி கழித்த சிறுநீர், கொலையில் முடிந்துவிட்டது. விதி அதன்மூலம் விளையாடி விட்டது.
கவிதா கைது
இந்த கொலை வழக்கில் ஏட்டு செந்தில்குமாரின் கள்ளக்காதலி கவிதா முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலம்தான் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக தற்போது கருதப்படுகிறது. இருந்தாலும் முக்கிய குற்றவாளியான செந்தில்குமார் கைது செய்யப்பட்டால்தான் இந்த வழக்கு அடுத்தக்கட்டத்துக்கு நகரும்.
அவர் தலைமறைவாகி விட்டார். அவர் நெல்லை பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு தேடி வருகிறார்கள். தினமும் தங்கும் இடத்தை மாற்றி, செந்தில்குமார் தனிப்படை கையில் சிக்காமல் ஓடி வருகிறார். எத்தனை நாள்தான் ஓடுவார், என்று தனிப்படையினரும் விரட்டி வருகிறார்கள். ரவுடி ஐசக்கும், அவரது நண்பர்களும் தனிப்படை கையில் சிக்காமல்தான் உள்ளனர். அவர்களையும் கைது செய்ய தேடுதல் வேட்டை நடக்கிறது.