தர்மபுரியில் சிவசுப்பிரமணிய சாமி கோவில் தேரோட்டம்-பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்


தர்மபுரியில் சிவசுப்பிரமணிய சாமி கோவில் தேரோட்டம்-பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் சிவசுப்பிரமணிய சாமி கோவில் தேரோட்டம் நடந்தது. தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தைப்பூச திருவிழா

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி புற்றுமண் எடுத்தலும், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகளுடன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. மேலும் பால் குட ஊர்வலமும், சாமி திருக்கல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவம் நடந்தது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சிவசுப்பிரமணிய சாமி முக்கிய பகுதிகள் வழியாக வலம் சென்றார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குதிரை வாகன உற்சவம்

இன்று (செவ்வாய்க்கிழமை) வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், நாளை (புதன்கிழமை) விழா கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், வருகிற 10-ம் தேதி சயன உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், செயல் அலுவலர் ராதாமணி மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.


Next Story