தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர்த்திருவிழா

அரூர் அருகே தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மக தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகளும், கணபதி ஹோமமும் நடந்தது.

பின்னர் ஒவ்வொரு நாளும் அன்னபட்சி வாகனம், ராவனேசுவர வாகனம், மயில் வாகனம் ஆகியவற்றில் சாமி திருவீதி உலா சென்றார். 8-ந் தேதி திருவிளக்கு பூஜையும், 10-ந் தேதி சாமி திருக்கல்யாணமும் நடந்தது. பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார்.

வடம் பிடித்து இழுத்தனர்

விழாவின் முக்கிய நாளான நேற்று மாசி மக தேரோட்டம் நடந்தது. மதியம் 2 மணிக்கு விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், அம்மன் சாமிகள் வெவ்வேறு தேர்களில் எழுந்தருளினர். விநாயகர் தேர் முன் செல்ல, பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் தீர்த்தகிரீஸ்வரர் பின் சென்றார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரின் மீது விவசாயிகள் தங்கள் விளை பொருட்களையும், பக்தர்கள் மிளகு, உப்பு, பொறிகடலை, ஆமணக்கு ஆகியவற்றை வீசினர். தேரோட்டத்தையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், செயல் அலுவலர் பிரபு, அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story