ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடு என நினைத்து பக்கத்து வீட்டில் கல்வீசி ஜன்னல், கார் கண்ணாடி உடைப்பு
திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடு என நினைத்து பக்கத்து வீட்டில் கல்வீசி ஜன்னல், கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடு என நினைத்து பக்கத்து வீட்டில் கல்வீசி ஜன்னல், கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்
கோவையில் பா.ஜனதா அலுவலகம் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் கடைகளை குறி வைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில பொறுப்பாளர் வீட்டின் பக்கத்து வீட்டில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 45). ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில பொறுப்பாளராக உள்ளார். இவர் திருப்பூர் ஜெய் நகர் 5-வது வீதியில் வாடகை வீட்டில் வசித்தபடி தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் அப்பகுதிக்கு 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்களில் 2 பேர், பிரபுவின் வீடு எது என்று ஒரு வீட்டில் விசாரித்துள்ளனர்.
கல் வீசினர்
அவர்கள் யார் என்று விசாரிப்பதற்குள் மற்ற 2 பேரும் பிரபு வீடு என நினைத்து அந்த வீட்டின் மீது கற்களை வீசினர். இதில் அந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
சத்தம் கேட்டு பிரபு வெளியே வந்து பார்த்த போது பக்கத்து வீ்ட்டில் கார் கண்ணாடி மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் துணை கமிஷனர் நந்தினி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் புலனாய்வு பிரிவை சேர்ந்த போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
கேமரா காட்சிகள் ஆய்வு
விசாரணையில், கல் வீசிய மர்ம நபர்கள் காலை முதலே அந்த பகுதியில் நோட்டமிட்டு வந்ததும், பிரபு வீடு எது என்று தெரியாமல், பிரபு வீட்டின் பக்கத்து வீட்டில் கல்வீசி ஜன்னல் மற்றும் கார் கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட மோப்ப நாய் சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி வந்தது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.