கார் மோதி கல்லூரி மாணவர் பலி
கார் மோதி கல்லூரி மாணவர் பலி
தாராபுரம்
தாராபுரம் அருகே புத்தாண்டு தின வாழ்த்து என சாலையில் வாசகம் எழுதி க்க்கொண்டிருந்த 3 பேர் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் இறந்தார். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சாலையில் புத்தாண்டு வாசகம்
தாராபுரம்-கரூர் செல்லும் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த வாலிபர்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர்.
பிறகு சாலையில் அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் என்ற வாசகத்தை எழுத அதே பகுதியை சேர்ந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த தனுஷ் (வயது 19), பெட்ரோல் பங்க் ஊழியர் ஜீவானந்தம் (19) மற்றும் பள்ளி மாணவன் கவினேஷ் (14) ஆகிய 3 பேர் தாராபுரம்-கரூர் சாலையில் வெள்ளை சுண்ணாம்பு கொண்டு புத்தாண்டு வாசகத்தை எழுதிக்கொண்டிருந்தனர்.
கார் மோதியது
அப்போது தாராபுரத்தில் இருந்து மூலனூர் நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் எழுதிக்கொண்டிருந்த 3 பேர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிக்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கல்லூரி மாணவர் பலி
அங்கு மாணவர் தனுஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியினர் சோகத்தில் மூழ்கினர்.