லாரி மீது கார் மோதல்; டி.வி. மெக்கானிக் பலி
லாரி மீது கார் மோதல்; டி.வி. மெக்கானிக் பலி
அவினாசி
அவினாசி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் டிவி. மெக்கானிக் பலியானார். பலத்த காயம் அடைந்த நண்பர்கள் 4 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விபத்து
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆரோட்டுப்பாறையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் விஜய் (வயது 26). டி.வி. மெக்கானிக். இவரும், இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (25), திவான் (29), நேதாஜி (31), தரணிஷ் (30) ஆகியோரும் ஒரு காரில் நேற்று ஈரோட்டிலிருந்து கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை விஜய் ஓட்டினார். அதிகாலையில் இவர்களது கார் அவினாசியை அடுத்த நாதம்பாளையம் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டி.வி.மெக்கானிக் பலி
இதில் டி.வி.மெக்கானிக் விஜய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 4 பேரும் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.