திருச்செந்தூரில்கார்-லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; 9 பேர் படுகாயம்


திருச்செந்தூரில்கார்-லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில்கார்-லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதியவிபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் கார்-லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

கால் சென்டர்

திருச்செந்தூர் அருகே கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் அப்பகுதியில் கால் சென்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திருச்செந்தூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை நிறுவனத்தின் வாகனத்தில் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் காலையில் பணிக்கு அழைத்து வந்து, மாலையில் திருப்பி கொண்டு விடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று வேலைக்கு வந்த 8 பெண்கள் மாலையில் காரில் திருச்செந்தூர் பஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

9 பேர் படுகாயம்

காரை ஸ்ரீவைகுண்டம், குரூஸ் கோவில் தெரு தொம்மை பிச்சை மகன் அந்தோணி (51) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். திருச்செந்தூர் ஜெயந்திநகர் அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் சென்ற போது எதிரே நிலைதடுமாறி வந்த லோடு ஆட்டோ ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார் ஓட்டுனர் அந்தோணி, திருச்செந்தூரை ேசர்ந்த செல்வபுஷ்பம் (24), ஸ்ரீ வித்யா (32), பவானி (23), உமா (23), அர்ச்சனா (22), அனிதா (24), இன்பக்கனி (24), முத்து கார்த்திகா (23) ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் வலைவீச்சு

இதற்கிடையில் ஆம்புலன்ஸில் வந்த பெண் உதவியாளரை ஆட்டோவை ஓட்டிவந்தவர் தாக்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து அந்த நபர் ஆட்டோவை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அந்த மர்ம நபரை தேடிவருகின்றனர்.


Next Story