கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி
x

தேவர்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் பலியானார். அவரது கணவர், குழந்தை படுகாயம் அடைந்தனர்.

தென்காசி

பனவடலிசத்திரம்:

தேவர்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் பலியானார். அவரது கணவர், குழந்தை படுகாயம் அடைந்தனர்.

மெக்கானிக்

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா மருக்காலங்குளம் ஊரைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 35) மெக்கானிக். இவரது மனைவி சரண்யா (32). இவர்களுக்கு 3 வயதில் ஆனந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அமல்ராஜ் தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா சுப்பையாபுரத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

மனைவி சாவு

தேவர்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் பகுதியில் வந்தபோது நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி கார் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் தூக்கி வீசப்பட்ட சரண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அமல்ராஜ், குழந்தை ஆனந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கார் டிரைவர் கைது

அமல்ராஜ், குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான நெல்லை பாரதிநகரைச் சேர்ந்த சாமி (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story