கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்;  கல்லூரி மாணவர் பலி
x

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

கல்லூரி மாணவர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம், கரமனை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். திருவனந்தபுரம் மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விக்னேஷ் (வயது 21). இவர் தக்கலை அருகே உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி பாராமெடிக்கல் படித்து வந்தார்.

கார் மோதியது

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் விக்னேஷ் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். மதியம் உணவு இடைவேளையின்போது, விக்னேஷ் தன்னுடன் படிக்கும் கேரள மாநிலம் களக்கூட்டம் பகுதியை சேர்ந்த முகமது சயாஸ் என்பவரின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக இவரும் புலியூர்குறிச்சிக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை முகமது சயாஸ் ஓட்டினார். விக்னேஷ் பின்னால் அமர்ந்திருந்தார். புலியூர்குறிச்சியில் பெட்ரோல் நிரப்பி விட்டு அவர்கள் மீண்டும் கல்லூரிக்கு புறப்பட்டனர்.

அப்போது, எதிரே வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயடைந்தனர்.

மாணவர் பலி

இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக விக்னேசை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கேரளபுரம் சரல்விளையை சேர்ந்த வினோத் (29) என்பவர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story