பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம்
பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,
சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் கிங்ஸ்டன். இவருடைய மனைவி பபிதா (39). இவர்களது குழந்தைகள் லிபின் (12), ஜியோனா (10). இவர்கள் அருப்புக்கோட்டை வழியாக காரில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த காரை தாமஸ் கிங்ஸ்டன் ஓட்டிச்சென்றார். அப்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்த போது அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பபிதா, ஜியோனா மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.