பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் காயம்
வடமதுரை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் காயம் அடைந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). இவர், ஒரு காரில் சென்னைக்கு சென்றார். அந்த காரை அல்லிநகரம் வடக்கு தெருவை சேர்ந்த பாண்டி (42) ஓட்டினார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து இவர்கள் 2 பேரும் தேனிக்கு திரும்பி கொண்டிருந்தனர். திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வடமதுரையை அடுத்த கோப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் பள்ளி அருகே கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் மைய தடுப்புச்சுவரில் மோதி, மறுபுறம் சென்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை ஓட்டிய பாண்டி, லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.