சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு


சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
x

கீரம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பரமத்திவேலூர்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டியைச் சேர்ந்த சுரேஷ்(47), அழகுராஜா (31), கணேசன் (30), அம்சகொடி(50), ஜெயபாண்டியன்(42), சுகன்யா(25) காரின் டிரைவர் சிலம்பரசன்(32) உட்பட 7 பேர்கள் கோடங்கிபட்டியில் இருந்து காரில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த கார் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் கீரம்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென ஒரு வாகனம் வந்துள்ளது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் காரில் வந்த சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து பரமத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உயிரிழந்த‌ சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த சுரேஷ், அழகுராஜா,கணேசன், அம்சகொடி மற்றும் கார் டிரைவர் சிலம்பரசன் ஆகிய 5 பேரையும் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story