தஞ்சையில் ரூ.2.90 கோடியில் ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய கார் பார்க்கிங்


தஞ்சையில் ரூ.2.90 கோடியில் ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய கார் பார்க்கிங்
x

தஞ்சையில் ரூ.2.90 கோடியில் ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய கார் பார்க்கிங்

தஞ்சாவூர்

தஞ்சையில் ரூ.2 கோடியே 90 லட்சம் செலவில் நவீன ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய கார் பார்க்கிங் நிறுவப்பட்டுள்ளது. 6 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு திறப்புக்கு தயாராக உள்ளது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

கார் பார்க்கிங் வசதி

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 102 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குளங்கள் சீரமைப்பு, குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி, அகழி சீரமைப்பு, பஸ் நிலையம் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் வணிக வளாகத்தில் நவீன ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 90 லட்சம் செலவில் இந்த கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. 3 நிலைகளை கொண்ட ஹைட்ராலிக் கார் பார்க்கிங் வசதியில் 2-ல் தலா 20 கார்கள் வீதம் 40 கார்களும், மற்றொன்றில் 16 கார்களும் என மொத்தம் 56 கார்கள் நிறுத்தலாம்.

6 மாதத்தில் பணிகள் நிறைவு

இந்த பணிகள் அனைத்தும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது சோதனை முறையில் இயக்கி சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மேயர் சண்.ராமநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டலக்குழு தலைவர் மேத்தா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 102 பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை ஜூன் 3-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள நவீன கார்பார்க்கிங் வசதியில் 56 கார்களும், இது அமைந்துள்ள இடத்தில் 10 கார்களும் என 66 கார்களை நிறுத்தலாம். இதனை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். அதன் பின்னர் பொது ஏலமிடப்பட்டு, குறைந்த வாடகை நிர்ணயம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story