காரில் மது கடத்தியவர் கைது
சீர்காழியில், காரில் மது கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி
சீர்காழியில், காரில் மது கடத்தியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3,550 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் வாகன சோதனை
சீர்காழி ரயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் இரவு சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புறவழிச்சாலையில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த காரில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மதுபாட்டில்கள் மூட்டைகளில் அதிகளவு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது புதுச்சேரியில் இருந்து காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
3,550 மதுபாட்டில்கள் பறிமுதல்
அதனைத்தொடர்ந்து 3,550 மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்த பிரசாத்(வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம், இந்த மதுபாட்டில்கள் எங்கு, யாருக்காக கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.