கார், வேன் நேருக்கு நேர் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி


கார், வேன் நேருக்கு நேர் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி
x

கரூர் அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதி கொண்டதில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

மாப்பிள்ளை பார்க்க சென்றவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கொரனாட்டி கருப்பூர் கிராமத்தில் உள்ள சின்ன கருப்பு தெருவை சேர்ந்தவர் கவுதமன் (வயது 56), இவரது மனைவி மாலா (50). இந்த தம்பதிக்கு ஆகாஷ் (21) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று கவுதமனின் மகளுக்கு கோவை மாவட்டம் சூலூரில் மாப்பிள்ளையை பார்ப்பதற்காக கவுதமன், மாலா, ஆகாஷ் மற்றும் இவர்களது உறவினர்களான கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையை சேர்ந்த கவுரி (48), திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கிழக்கு தெரு பூந்தோட்டத்தை சேர்ந்த ஹரிதாஸ் (53), ராஜேஸ்வரி (45), ஹேமலதா (54) ஆகிய 7 பேரும் ஒரு காரில் கும்பகோணத்தில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு சென்றனர்.

வேன்-கார் மோதல்

பின்னர் சூலூரில் மாப்பிள்ளையை பார்த்து விட்டு அங்கிருந்து அதே காரில் கும்பகோணத்திற்கு 7 பேரும் வந்து கொண்டிருந்தனர். காரை கவுதமன் ஓட்டி வந்தார்.

அந்த கார் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள லட்சுமிபுரம் என்னும் இடத்தில் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிரே வந்த சரக்கு வேனும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

2 பேர் பலி

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி கவுதமன், கவுரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மாலா, ஆகாஷ், ஹரிதாஸ், ராஜேஸ்வரி, ஹேமலதா, சரக்கு வேனில் வந்த திருப்பூர் மாவட்டம், கொடுவாயை சேர்ந்த இளவரசன் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த 6 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு

பின்னர் கவுதமன், கவுரி ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Related Tags :
Next Story