கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளை


கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளை
x

பெரம்பலூரில் ஓட்டல் முன்பு நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதேபோல் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியரின் செல்போன், பணம் திருட்டு போனது.

பெரம்பலூர்

போட்டோ, வீடியோ

சென்னை பூவிருந்தமல்லி மல்லியம் நரசிம்மா நகர், ஜேம்ஸ் 5-வது தெருவில் வசித்து வருபவர் மகேஷ்பாபு (வயது 32). இவரது நண்பர்களான பள்ளிக்கரணை காமக்கோட்டை நகரை சேர்ந்த ரமேஷ் (32), விருகம்பாக்கம் முனுசாமி தெருவை சேர்ந்த ஜோசப்கமல் (32), திருவள்ளுர் மாவட்டம் பெருமாள்பட்டு பெம்மஸானி நகரை சேர்ந்த ஸ்ரீராம்லு (37) ஆகியோர் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தரும் வேலையை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்களது காரில் பட்டுக்கோட்டைக்கு சென்று அங்கு நடந்த ஒரு திருமணவிழாவில் போட்டோ, வீடியோ எடுத்தனர்.

எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளை

பின்னர் வந்தவாசியில் நடைபெற உள்ள திருமணவிழாவிற்காக நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அயன்பேரையூர்-கைகாட்டி அருகே ஒரு ஓட்டல் முன்பு தங்களது காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த கேமராக்கள்-2, கேமரா லென்சு-5, லேப்டாப், ஹார்டு டிஸ்க்-2 மற்றும் கேமரா உபகரணங்கள் என ரூ.9 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த மகேஷ்பாபு மற்றும் அவரது நண்பர்கள் ஓட்டல் உரிமையாளரிடம் முறையிட்டனர். அதனைத்தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரின் கண்ணாடியை உடைத்து எலக்ட்ரானிக் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

பேராசிரியர்

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி பறவைகள் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பீர்முகமது (54). இவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சமீமாபானு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். பீர்முகமதுவும், சமீமாபானுவும் சென்னைக்கு தங்களது காரில் சென்றுவிட்டு, நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் பெரம்பலூரை அடுத்த கல்பாடி பிரிவு பாதையில் உள்ள பிரபல உணவகத்தின் முன்பு காரை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட சென்றனர்.

சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது காரின் இடதுபக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன், மற்றொரு செல்போன் ரூ.2 ஆயிரம், டாக்டர் சமீமாபானுவின் மெடிக்கல் கவுன்சில் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி ஏ.டி.எம். கார்டு, ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆடைகள் வைத்திருந்த பை ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோந்து செல்ல கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் வீடுகளில் புகுந்து திருடும் சம்பவங்களும், வழிப்பறி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்வதுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story