12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தொழில் பாதை திட்டம்
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தொழில் பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தொழில் பாதை திட்டம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐ.ஐ.டி.) மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகம் உலகிலேயே முதல் முறையாக இளங்கலை தரவு அறிவியல் மற்றும் மின்னணு அமைப்புகள் பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது. இதில் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து 4 ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். செப்டம்பர் 2023-ம் ஆண்டு வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் வரவேற்கப்படுகிறது.
பட்டப்படிப்பு
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) பங்கு பெறத்தேவையில்லை. அதற்கு பதிலாக 12-ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் இணையான படிப்பு முடித்த மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக்கழகம் மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
மேலும் இத்திட்டத்தில் பயில அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. அதன்படி, மாணவர்கள் ஒரு அடிப்படை சான்றிதழ், ஒன்று அல்லது 2 டிப்ளமோக்கள் அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம். இந்த வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன.
வேலைவாய்ப்பு
மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பை படித்துக் கொண்டே இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் வழங்கும் இளங்கலை தரவு அறிவியல் மற்றும் மின்னணு அமைப்புகள் பட்டப்படிப்பு, இதில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பையும் படிக்கலாம். தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500-க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளது. இத்திட்டத்தில் முறையாக 4 வருடம் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக்கழகத்தில் நேரடியாக படிப்பதற்கான கேட் தேர்வு எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கான தகுதியாக மாணவர்கள் தங்களது 12-ம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்
தாட்கோவில் பதிவு செய்த மாணவர்கள் இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இளங்கலை தரவு அறிவியலுக்கான தேர்வு கட்டணம் ரூ.1500 மற்றும் மின்னணு அமைப்புகள் பட்டப்படிப்புக்கு தேர்வு கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.