கிணற்றில் பாய்ந்த சரக்கு ஆட்டோ
நாட்டறம்பள்ளி அருகே சரக்கு ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது.
நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை கள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பேரரசன் (வயது 24). இவர் தனது சரக்கு ஆட்டோவை, வீட்டின் அருகே உள்ள மரத்தடியில் நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பேரரசன் வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது திடீரென சரக்கு ஆட்டோ பின்னோக்கி சென்று அங்குள்ள தரைமட்ட கிணற்றில் பாய்ந்தது. சுதாரித்துக்கொண்ட பேரரசன் உடனடியாக கிணற்றில் குதித்து காயமின்றி உயிர் தப்பினர்.
அதன் பிறகு அவர் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சரக்கு ஆட்டோவை 2 மணி நேரம் போராடி பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.