பெண்ணாடம் அருகே விபத்து:சரக்கு லாரி ஆற்றில் கவிழ்ந்ததுடிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
பெண்ணாடம் அருகே சரக்கு லாரி ஆற்றில் கவிழ்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
பெண்ணாடம்,
ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). லாரி டிரைவர். இவர் நேற்று காலை 7 மணி அளவில் சரக்கு லாரியை அரியலூர் மாவட்டம், தளவாய் அருகே உள்ள தனியார் சிமெண்டு தொழிற் சாலைக்கு சிமெண்டு ஏற்றுவதற்காக ஓட்டி வந்தார். அந்த லாரி பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி வெள்ளாறு தரைப்பாலத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக லாரியின் அச்சு முறிந்து (ஸ்டியரிங்) டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. சிறிது தூரம் சென்ற அந்த லாரி 6 அடி பள்ளத்தில் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தை பார்த்த வாகன ஓட்டிகள், ஓடிச்சென்று டிரைவரை மீட்டனர். அவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இது பற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆற்றில் கிடந்த சரக்கு லாரியை கிரேன் மூலம் வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.