சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கல்லக்குடி:
கல்லூரி மாணவர்
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தெங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாரிவேந்தன். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு ரோகித்(வயது 22) என்ற மகன் மற்றும் மகிஷா என்ற மகள் உண்டு. இதில் ரோகித் குமுளூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பாரிவேந்தன் கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் ரோகித்தும், அவரது நண்பரான வாளாடியை சேர்ந்த ராஜேசும்(19) ேநற்று தங்களது நண்பரின் அக்காள் திருமணத்திற்காக அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கள்ளூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
சாவு
புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் ஆலம்பாக்கம் கிராமத்தை தாண்டி புதூர்பாளையம் திரும்பும் வழியில் சென்றபோது இவர்களுக்கு முன்பாக சென்ற சரக்கு வேன் புதூர்பாளையம் சாலையில் வேகமாக திரும்பி உள்ளது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும், சரக்கு வேனும் மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது சாலையோர பாலத்தின் தடுப்புச்சுவர் மீது ரோகித்தின் தலை இடித்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் அங்கு விரைந்து வந்தது. அதில் வந்தவர்கள் பார்த்தபோது, ரோகித் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. காயமடைந்த ராஜேஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்லக்குடி போலீசார், ரோகித்தின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான சரக்கு வேன், மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, தலைமறைவான சரக்கு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்தில் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.