சரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதல்; பெண்கள் உள்பட 4 பேர் பலி


சரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதல்; பெண்கள் உள்பட 4 பேர் பலி
x

கரூர் அருகே சரக்கு வேன்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

குலதெய்வ கோவிலுக்கு சென்றவர்கள்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 41). இவரது மனைவி ரூப தேவி (37). சம்பவத்தன்று இவர்கள் மற்றும் உறவினர்களான முத்துலட்சுமி (46), அவரது மகன் வீராசாமி (10). மகள் கோவர்தினி (14), நதியா (32), ரஜினிஸ் (16), கமல் இருதயராஜ் (50) ஆகியோர் ஒரு சரக்கு வேனில் புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர். அங்கு வழிபாட்டை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு ஊருக்கு புறப்பட்டனர். வேனை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த வினோத் (35) என்பவர் ஓட்டி வந்தார்.

சரக்கு வேன்கள் மோதல்

இந்த சரக்கு வேன் நேற்று அதிகாலை 2 மணி அளவில் கரூர் மாவட்டம் தென்னிலை அருகே கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டுமுன்னூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து திருச்சிக்கு தார் லோடு ஏற்றிக் கொண்டு மற்றொரு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்தில் 2 சரக்கு வேன்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

4 பேர் பலி

இந்த கோர விபத்தில் நதியா, முத்துலட்சுமி, ரூபதேவி வேன் டிரைவர் வினோத் ஆகிய 4 பேரும் வேனின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் வெங்கடேஷ், கமல் இருதயராஜ், ரஜினிஸ், கோவர்தினி, வீராசாமி, தார் லோடு ஏற்றி வந்த வேனில் வந்த திருச்சி சமயபுரம் பாலாஜிநகரை சேர்ந்த பன்னீர்செல்வம் (30), மணிகண்டன் (31), அந்த வேனை ஓட்டி வந்த டிரைவர் ரூபன் (33) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 8 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம், ரூபன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர். விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story