காரில் கடத்தப்பட்ட ரவுடி திருவண்ணாமலையில் மீட்பு நகைக்கடை உரிமையாளர், மேலாளர் கைது
சேலத்தில் காரில் கடத்தப்பட்ட ரவுடியை திருவண்ணாமலையில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர், மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
ரவுடி கடத்தல்
சேலம் கோரிமேடு பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 36). ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (35). இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபதியின் வீட்டு முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 20 பேர் கொண்ட கும்பல், அவர்களை தாக்கி கடத்தி சென்றது.
பின்னர் 5 ரோட்டில் மற்றொருவரை காரில் ஏற்ற நின்றபோது பிரவீன்குமார் மட்டும் காரில் இருந்து குதித்து தப்பிசென்றுவிட்டார். ஆனால் அந்த கும்பல், ரவுடி பூபதியை மட்டும் கடத்தி சென்றது. இது தொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், கடத்தல் கும்பலை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் நாகராஜன், லட்சுமிபிரியா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
திடுக்கிடும் தகவல்கள்
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பூபதியை காரில் கடத்திய கும்பல், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்றபோது, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், கீழ் பெண்ணாத்தூர் பகுதியில் ரவுடி பூபதியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றது. பின்னர் பூபதியை போலீசார் மீட்டு சேலத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில், சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரத்திற்கு சொந்தமான நிலம் வீராணத்தில் உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். நிலத்தை விற்று தருவதாக கூறி நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து அசல் பத்திரததை பூபதி வாங்கி சென்றுள்ளார். ஆனால் நிலத்தை விற்று தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஏகாம்பரம், தனது பத்திரத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பூபதி தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏகாம்பரம் கூலிப்படையை வைத்து பூபதியை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைக்கடை உரிமையாளர் கைது
இதுதொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம், கடையின் மேலாளர் பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதே போல நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம், தனது நிலத்தை விற்று தருவதாக கூறி நிலப்பத்திரத்தை பூபதி வாங்கி கொண்டு தராமல் ஏமாற்றி வந்ததாகவும், பத்திரத்தை கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ரவுடி பூபதி மீது ஏமாற்றுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட அன்னதானப்பட்டியை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் பிரபு மற்றும் அவரின் கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.