தொடர் மழையால் கேரட் பயிர்கள் அழுகி நாசம்


தொடர் மழையால் கேரட் பயிர்கள் அழுகி நாசம்
x

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் கேரட் பயிர்கள் அழுகி நாசமானது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி, ஜூன்.8-

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் கேரட் பயிர்கள் அழுகி நாசமானது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

கேரட் சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் 5000 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு போன்ற பயிர்களும், கூடலூர் பகுதியில் இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களும் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான கேத்தி, எம்.பாலாடா, மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான மழை பெய்து வருகிறது. இதனால் கேரட் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

அழுகி விணாகிறது

இதுகுறித்து பர்னல் பகுதி விவசாயி பழனிச்சாமி, கேத்தி பகுதி விவசாயி ராஜு உள்ளிட்டோர் கூறியதாவது:-

வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் கேரட் சாகுபடி செய்து ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்வோம். இந்த போகத்தில் தான் சரியான தட்ப வெட்ப நிலை காரணமாக நல்ல விளைச்சல் கிடைக்கும். ஆனால் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் அதிக மழை இருந்தது. இதனால் தோட்டத்தில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் 3-ல், 2 பங்கு அழுகி வீணாகி விட்டது.

கேரட் சாகுபடி செய்ய 1 ஏக்கருக்கு ரூ.1 லட்சம் முதல் 1½ லட்சம் வரை செலவாகிறது. இதன்படி ஏக்கருக்கு 25 முதல் 30 டன் கேரட் அறுவடை செய்தால்தான் கட்டுபடியாகும். ஆனால் தற்போது 10 டன் வரை மட்டுமே கேரட் கிடைக்கிறது. இதேபோல் அதிக மழையால் கிழங்கு, பூண்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விவசாயிகள் ேசாகம்

இதுகுறித்து நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு மற்றும் மழை காய்கறி உற்பத்தி சங்க முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தொடர் மழையால் நிலத்தில் சூடு அதிகமாகி கேரட் அழுகிவிட்டது. மேலும் பூண்டில் வேர்ப்புழு அதிகரித்துள்ளது. இந்த மழையால் காய்கறி விவசாயிகளுக்கு கடும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.

எனவே மழையால் அழுகி நாசமாக கேரட்டுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிககை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கணக்கெடுக்கும் பணி

இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரி ஷிப்லா மேரி கூறுகையில், மாவட்டம் முழுவதும் முதல்கட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதில் 100 ஏக்கர் பரப்பளவில் கேரட் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சற்று மழை குறைந்துள்ளதால் இறுதிக்கட்ட கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.


Next Story