நாகர்கோவில் வடசேரி சந்தையில் கேரட் விலை உச்சத்தை தொட்டது; கிலோ ரூ.140-க்கு விற்பனை


நாகர்கோவில் வடசேரி சந்தையில் கேரட் விலை உச்சத்தை தொட்டது; கிலோ ரூ.140-க்கு விற்பனை
x

நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் ஒரு கிலோ கேரட் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

நாகா்கோவில்,

நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் ஒரு கிலோ கேரட் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கனகமூலம் சந்தை

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் தினமும் 10-க்கும் அதிகமான டெம்போக்களில் காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து காய்கறிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று சிறு, சிறு கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட கனகமூலம் சந்தையில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது.

அதாவது வழக்கமாக ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செயப்படும் தக்காளி கிடு கிடுவென உயர்ந்து தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுவே கடைகளை பொறுத்த வரையில் தக்காளி கூடுதாக ரூ.10 உயர்ந்து ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்தே காணப்படுவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

கேரட் விலை உச்சம்

அதே சமயம் கடந்த 2 நாட்களில் ஒப்பிடுகையில் மற்ற சில காய்கறிகளின் விலையும் கனிசமாக உயர்ந்துள்ளது. அதாவது கத்தரிக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் கடந்த வாரத்தில் இருந்து இந்த வாரம் கிலோவுக்கு ரூ.5 அதிகரித்து இருக்கிறது. மேலும் கேரட் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது ஒரு கிலோ கேரட் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வடசேரி சந்தையில் காய்கறிகளின் நேற்றைய விலை (ஒரு கிலோ) நிலவரம் வருமாறு:-

கத்தரிக்காய்-ரூ.75, பீன்ஸ்-ரூ.70, முட்டைக்கோஸ்-ரூ.36, சேனைக்கிழங்கு-ரூ.30, பீட்ரூட்-ரூ.30, வெண்டைக்காய்-ரூ.40, வெள்ளரிக்காய்-ரூ.40, இஞ்சி-ரூ.70, முருங்கைக்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.20, தடியங்காய்-ரூ.15, சுரக்காய்-ரூ.25, பூசணிக்காய்-ரூ.10, சவ்சவ்-ரூ.20, முள்ளங்கி-ரூ.40, காலிபிளவா்-60, சின்ன வெங்காயம்-70 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைய வாய்ப்பு

காய்கறிகள் விலை ஏற்றம் குறித்து சந்தை வியாபாரி ஒருவர் கூறுகையில், வடசேரி கனகமூலம் சந்தைக்கு ஓசூர் மற்றும் மேட்டூரில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது. தற்போது வரத்து குறைவாக உள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது.

மேலும் கேரட் வரத்தும் குறைந்து இருப்பதால் விலை அதிகமாக உள்ளது. இதுபோக நவராத்திரி பண்டிகை வந்துள்ளதால் காய்கறிகள் தேவை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் காய்கறிகளின் விலை இயல்பு நிலையை அடைந்துவிடும் என்றார்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.


Next Story