விபத்துக்குள்ளான வேன் மீது அடுத்தடுத்து கார்கள் மோதி 6 பேர் காயம்
பல்லடம் அருகே விபத்துக்குள்ளான வேன் மீது அடுத்தடுத்து கார்கள் மோதியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
பல்லடம், மே.30-
பல்லடம் அருகே விபத்துக்குள்ளான வேன் மீது அடுத்தடுத்து கார்கள் மோதியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
கார்கள் மோதிய விபத்து
பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி அரிசி பாரம் ஏற்றிய சரக்கு வேன் ஒன்று காளிவேலம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்தது. இந்த வேனுக்கு பின்னால் வந்த கார் வேனை முந்திச் செல்ல முயன்றது. அப்போது வேனும், காரும் ஒன்றோடு ஒன்று உரசி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறிய கார் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
6 பேர் காயம்
இதற்குப் பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து நின்று கொண்டிருந்த வேன் மீது மோதியது. இதில் திருப்பூரைச் சேர்ந்த முத்தையா மற்றும் 3 வயது சிறுமி உள்பட 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அடுத்தடுத்த கார்கள் மோதிய விபத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.