கார்கள் நேருக்கு நேர் மோதல்; 9 பேர் காயம்

ஆண்டிமடம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் ஒன்றுகூடி வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விபத்து
சென்னை ராணிப்பேட்டை வில்லாவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(வயது 64). இவரது மகன் ஸ்ரீதர்(29). இவர்கள் 2 பேரும் மயிலாடுதுறை அருகே உள்ள பேரளம் கோவிலுக்கு செல்வதற்காக ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை ஸ்ரீதர் ஓட்டினார்.
இதேபோல் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் மற்றும் அவரது உறவினர்கள், சிறுவர்கள் உள்பட 9 பேர் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஆண்டிமடம்- விருத்தாசலம் செல்லும் சாலையில் கருக்கை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தபோது 2 கார்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ராணிப்பேட்டையை சேர்ந்த மனோகரனுக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிந்தது. மேலும் கை முறிந்த நிலையில் ஸ்ரீதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தந்தை மகன் ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விசாரணை
மேலும் எதிரே வந்த காரில் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல்(40), உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா(27) உள்பட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 2 சிறுவர்கள் மட்டும் காயம் ஏதும் இல்லாமல் உயிர் தப்பினர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடி, கருக்கை பஸ் நிறுத்தம் அருகே அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.
எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பொதுமக்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






