கூடலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கார்கள்: 15 ஆண்டுகளாக சுற்றுலா வாகன தொழில் கடும் பாதிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க டிரைவர்கள் கோரிக்கை


கூடலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கார்கள்:  15 ஆண்டுகளாக சுற்றுலா வாகன தொழில் கடும் பாதிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க டிரைவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Sept 2022 12:30 AM IST (Updated: 25 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சொந்த உபயோகத்திற்காக வைத்திருக்கும் கார்களை விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதால் சுற்றுலா வாகன தொழில் 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்து வருவதாக டிரைவர்கள் குமுறலுடன் கூறினர்.

நீலகிரி

கூடலூர்

சொந்த உபயோகத்திற்காக வைத்திருக்கும் கார்களை விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதால் சுற்றுலா வாகன தொழில் 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்து வருவதாக டிரைவர்கள் குமுறலுடன் கூறினர்.

விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கார்கள்

முக்கடல் சங்கமிப்பது கன்னியாகுமரி... தமிழகம், கர்நாடகா- கேரளா என 3 மாநிலங்கள் இணைவது கூடலூர்... 2 ஊர்களும் சுற்றுலா சார்ந்த தொழிலால் இயங்கி வருகிறது. மேற்கு மலைத்தொடரின் ஒரு அங்கமாக திகழ்வதால் குளுகுளு காலநிலையை அனுபவிக்க வெளிமாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா வாகனங்கள் சுமார் 350 இயக்கப்படுகிறது.

இதை சார்ந்து ஏராளமான டிரைவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பெருகி வரும் சொகுசு கார்களால் சுற்றுலா வாகன தொழிலும் நலிவடைந்து வருகிறது. சொந்த உபயோகத்துக்காக வாங்கப்படும் கார்கள், விதிமுறைகளை மீறி சுற்றுலா தொழிலுக்கு ஈடுபடுத்தப்படுகிறது. இதனால் சுற்றுலா வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் கடந்த 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விதிமுறைகளை மீறி பயணிகளை அழைத்து செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா வாகன டிரைவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

குமுறல்

ஆனால் அதிகாரிகள் தரப்பில் உறுதியான நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள டிரைவர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு விதிமுறைகளை மீறி பயணிகளை அழைத்து சென்ற சொகுசு காரை சுற்றுலா வாகன டிரைவர்கள் சிறை பிடித்து கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயாவிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அந்தக் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பிரச்சினையில் அதிகாரிகள் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுற்றுலா வாகன தொழில் பாதுகாக்கப்படும் என டிரைவர்கள் மனக்குமுறலுடன் கூறி வருகின்றனர். எனவே அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முறையான சோதனை

கூடலூர் சுற்றுலா வாகன டிரைவர் அஷ்ரப் அலி:- ஆண்டுதோறும் 28 சதவீதம் வாகன காப்பீடு தொகை செலுத்தப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வாகன உதிரி பாகங்களின் விலை 40 சதவீதம் அளவுக்கு ஏற்றம், மெக்கானிக் சர்வீஸ் கட்டணம் என அனைத்து தரப்பினரின் விலை உயர்ந்து விட்டது. ஆனால் காலத்துக்கு ஏற்ப சுற்றுலா வாகன வாடகை கட்டணத்தை உயர்த்த முடியவில்லை. காரணம் சொந்த உபயோகத்திற்காக வாங்கக்கூடிய சொகுசு கார்கள், வணிகர் ரீதியாக சுற்றுலா தொழிலுக்கு ஈடுபடுத்தப்படுகிறது.

குறிப்பாக கேரளா, கர்நாடகா என வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொகுசு கார்கள் கூடலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படுகிறது. இதுபோன்ற வாகனங்களின் பதிவு எண் பலகையில் நீலகிரி என ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது. இதனால் அதிகாரிகளும் முறையான சோதனை செய்வதில்லை. சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எந்தவித பண பலன்களும் கிடைக்காது. இதை பொதுமக்கள் உணர வேண்டும். மேலும் அதிகாரிகள் இரும்பு கரம் கொண்டு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழ்வாதாரம் பாதிப்பு

சுற்றுலா வாகன டிரைவர் சுரேஷ்:-

கூடலூர் நர்த்தகி, 1-ம் மைல், கோழிப் பாலம், மண்வயல் உள்பட பல்வேறு இடங்களில் சொந்த வாகனங்களை குறைந்த வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கப்படுகிறது. வெளிமாநில வாகனங்கள் தமிழகத்தில் இயக்கப்படுவதால் அரசுக்கு தான் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் முறையாக வரிகள் செலுத்தி சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள எங்களைப் போன்ற டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுற்றுலா வாகனங்களின் பெர்மிட்டுகளை திரும்ப ஒப்படைக்க போவதாக அறிவித்து போராட்டத்தை தொடங்கினோம்.அப்போது கோவை, ஊட்டி ஆகிய இடங்களில் இருந்து வந்த போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எங்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் கூறினர். பின்னர் சில நாட்கள் கடும் சோதனை நடத்தப்பட்டது. இதனால் விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்களின் பயன்பாடு குறைந்தது. ஆனால் தொடர் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் அதிகரித்துள்ளது.

ஸ்டிக்கர்கள் ஒட்டி தப்பி விடுகின்றனர்

கூடலூர் டிரைவர் சிவராஜ் :-

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுகிறது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த சிலர் கூடலூரில் உள்ள விடுதிகளை குத்தகைக்கு நடத்தி வருகின்றனர். அவர்கள் வசம் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் உள்ளது. அதை விதிமுறைகளை மீறி கூடலூரில் இயக்குவதால் மாதம் 2 ட்ரிப்புக்கு கூட சுற்றுலா வாகனங்கள் ஓடுவதில்லை.

வாகனங்களில் டாக்டர், வக்கீல் என சம்பந்தமே இல்லாத நபர்கள் ஸ்டிக்கர்கள் ஒட்டி விதிமுறைகளை மீறி பயணிகளை அழைத்து செல்கின்றனர். இவ்வாறு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதால் அதிகாரிகள் சோதனையில் இருந்து தப்பி விடுகின்றனர். இதேபோல் வங்கி உள்பட அரசு அலுவலகங்கள் பயன்பாட்டுக்கு அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ள சுற்றுலா வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் சொந்த உபயோகத்துக்கு வைத்திருக்கும் வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

குடும்பத்தை நடத்த முடியாமல்

கூடலூர் டிரைவர் மணிமாறன்:-

கூடலூர் பகுதியில் இருந்து தினமும் கர்நாடகாவுக்கு விதிமுறைகளை மீறி சொந்த உபயோக வாகனங்கள் இயக்கப்படுகிறது. கூடலூரில் இருந்து தினமும் கேரளாவுக்கு நோயாளிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். சில சமயங்களில் நோயாளிகளை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்போது அங்குள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் மிக அதிக வேகம் என பதிவாகி பல மடங்கு அபராத கட்டணம் விதிக்கப்படுகிறது.

நோயாளியின் நிலைமையை கருத்தில் கொண்டு மிதமான வேகத்தில் கூட சென்றால் அவர்களிடம் வாங்கும் வாடகை கட்டணத்தை விட அதிகமாக அபராதம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இப்பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களால் எந்தவித வருவாயும் இன்றி குடும்பத்தை நடத்த முடியாமல் உள்ளது. இவ்வாறு 15 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலா வாகன தொழிலில் போராடி வருகிறோம். எங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story