மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு


மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு
x

பணம் வாங்கிக்கொண்டு மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை


பணம் வாங்கிக்கொண்டு மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பணம் வாங்கிக்கொண்டு தேர்ச்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனுமதியுடன், சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தொலைதூர படிப்புக்கான கல்வி மையத்தை நடத்தினர். அந்த மையத்தில் பணியாற்றியவர்கள், மாணவர்களிடம் வசூலித்த பணத்தை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை.

மேலும் தேர்வில் தோல்வி அடைந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மோசடியாக அவர்களை தேர்ச்சி பெற செய்துள்ளனர். இதன் மூலம் காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2017-ம் ஆண்டு புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடந்தது. மோசடி நடந்திருப்பதும் உறுதியானது.

8 பேர் மீது வழக்கு

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்கண்ட மோசடி தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் அப்போதைய கூடுதல் தேர்வு ஆணையர் ராஜராஜன், சூப்பிரண்டுகள் சத்தியமூர்த்தி, ராஜபாண்டி, பல்கலைக்கழக தேர்வுகள் நடத்தும் பிரிவு அலுவலர் கார்த்திகை செல்வன், கேரள மாநிலம் கருநாகப்பள்ளியை சேர்ந்த ஜெஜி, மலப்புரம் தொலைதூர கல்வி மையத்தை சேர்ந்த அப்துல்அஜீஸ், ஏ.கே.சுரேஷ், திருச்சூர் கல்லூரியில் உள்ள கல்வி மைய அலுவலர் ஜெயப்பிரகாசம் ஆகிய 8 பேர் மீது மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இறந்தவர் மீதும் வழக்கு

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

அதில் ராஜராஜன் ஏற்கனவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர். விசாரணை நடந்துவந்த நிலையில் இறந்துவிட்டார். ஆனால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது பணிக்காலத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்திலும் விசாரணை

வழக்குப்பதிவை தொடர்ந்து நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார், காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றனர். அங்கு பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் தொலைநிலைக்கல்வி இயக்கக அதிகாரிகள், தேர்வுப்பிரிவு ஊழியர்கள் ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story