வரதட்சணை கொடுமை புகார்: சிறை காவலர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் குமாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). புதுடெல்லியில் உள்ள திகார் சிறையில் காவலராக உள்ளார். இவருக்கும் தர்மபுரியை சேர்ந்த நிவேதா (24) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது நிவேதாவின் பெற்றோர் 33 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்னேஷ் புதுடெல்லிக்கு பணிக்கு சென்று விட்டார். கணவர் வீட்டில் வசித்த நிவேதாவிடம் அவருடைய குடும்பத்தினர் கூடுதலாக 40 பவுன் நகை மற்றும் ஒரு காரை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நிவேதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். இது தொடர்பாக உறவினர்கள் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையின் போது புதுடெல்லிக்கு அழைத்து செல்வதாக கூறிய விக்னேஷ் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நிவேதா தர்மபுரி கூடுதல் மகளிர் கோர்ட்டில் மனு அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், விக்னேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.