நாகரசம்பட்டி அருகே நிலத்தகராறில் மோதல்; 6 பேர் மீது வழக்கு
காவேரிப்பட்டணம்:
போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி பெருமாள் தெருவை சேர்ந்தவர் கோகிலா (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (28). உறவினர்களான இவர்கள் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்குள் கடந்த 5 ஆண்டுகளாக நில பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி அவர்களுக்குள் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அதில் கோகிலா தரப்பில் அவரும், கணவர் கிருஷ்ணமூர்த்தியும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கோகிலா நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சரவணன், சின்னசாமி (33) சின்ன பாப்பா (60) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் கோகிலா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.