கொத்தடிமையாக நடத்துவதை தட்டி கேட்ட தம்பதியை வீட்டில் அடைத்து வைத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு
மொரப்பூர்:
கொத்தடிமையாக நடத்துவதை தட்டி கேட்ட தம்பதியை வீட்டில் அடைத்து வைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரூ.3½ லட்சம் கடன்
மொரப்பூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவருடைய மனைவி வேடியம்மாள் (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். தொழிலாளியான செந்திலுக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். பின்னர் சந்தப்பட்டியை சேர்ந்த கோவிந்தன் (42) என்பவரிடம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கடனாக பெற்று, ஏற்கனவே பெற்ற கடனை அடைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செந்தில் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் கோவிந்தனிடம் கேபிள் குழி அமைக்கும் பணியில் தொழிலாளர்களாக வேலை பார்த்து உள்ளனர். 30 மாதங்கள் வேலை பார்த்தும் அவர்களுக்குரிய கூலியை வழங்காமல் உணவுக்கு மட்டும் பணம் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து தங்களிடம் கூலி இல்லாமல் வேலை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.
போலீசார் விசாரணை
இதை தட்டி கேட்ட செந்தில், வேடியம்மாள் ஆகிய 2 பேரையும் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இது தொடர்பாக செந்திலின் தம்பி விஜயகுமார் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், செந்தில் அவருடைய மனைவி வேடியம்மாள் ஆகியோரை மீட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக கொத்தடிமை சட்டப்பிரிவுகளின் கீழ் கோவிந்தன் மற்றும் இவருடைய தம்பி கிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.