பணியை தடுத்து நிறுத்திய 10 பேர் மீது வழக்கு
பணியை தடுத்து நிறுத்திய 10 பேர் மீது வழக்கு
முத்துப்பேட்டை தெற்குதெருவில் உள்ள ஒரு இடத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்க ஒப்பந்தம் செய்து சில மாதங்களுக்கு முன்பு பணிகளை தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து செல்போன் நிறுவனம் முறைப்படி அனுமதியும், மாவட்ட கலெக்டரிடம் அனுமதியும் பெற்று போலீசார் பாதுகாப்புடன் கடந்த 22-ந்்தேதி மற்றும் நேற்றுமுன்தினம் அப்பகுதியில் பணியை தொடங்க முயன்றனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர். பணியை தடுத்து நிறுத்தியதாக செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனம் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது. அதன்பேரில் பணியை தடுத்ததாக முத்துப்பேட்டை திமிலத்தெரு பகுதியை சேர்ந்த அப்துல் ரஜாக் மகன் தாவூது கான், முகமது பாரூக் மகன் பரக்கத் அலி, சாகுல் ஹமீது மகன் யூசூப், ஹாஜா அலாவூதீன் மகன் அன்வர்தீன், கமால் முகைதீன் மகன் ஜெகபர் சாதிக் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.