தொழிலாளியை தாக்கிய 11 பேர் மீது வழக்கு
தேனியில் தொழிலாளியை தாக்கிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி விஸ்வதாஸ் நகரை சேர்ந்த முத்தையா மகன் முத்துமாணிக்கம் (வயது 23). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு பிரச்சினை உருவானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேனி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் தரணி மற்றும் 10 பேர் சேர்ந்து, முத்துமாணிக்கத்திடம் வழக்கை வாபஸ் பெறுமாறு தகராறு செய்தனர்.
அப்போது அவர்கள் கட்டையால் அவரை தாக்கி, அவர் அணிந்து இருந்த அரை பவுன் மோதிரம், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் முத்துமாணிக்கம் புகார் செய்தார். அதன்பேரில் தரணி உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.