இரு தரப்பினர் மோதல் 12 பேர் மீது வழக்கு
திம்மச்சூர் கிராமத்தில் இரு தரப்பினர் மோதல் 12 பேர் மீது வழக்கு போலீஸ் குவிப்பு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் அருள்(வயது 24). இவரது நண்பர் கவுதம் அதே ஊரை சேர்ந்த அய்யப்பன் என்பவரின் வீட்டு பக்கம் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. இதை அய்யப்பன் தட்டி கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அருள் தனது நண்பரிடம் தகராறு செய்த அய்யப்பன் வீட்டுக்கு நேரில் சென்று கவுதமிடம் ஏன் தகராறு செய்தாய் எனக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன்கள் அருள், வெங்கடேசன், ராஜீவ்காந்தி, ஏழுமலை மகன்கள் ரமேஷ், பிரகாஷ், குண்டு மகன் சண்முகம் ஆகிய 7 பேரும் சேர்ந்து அருள் அவரது நண்பர் கவுதம் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்னர் இதுகுறித்து இரு தரப்பினரும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் சேகர் மகன் அருள் கொடுத்த புகாரின் பேரில் அய்யப்பன் உள்பட 7 பேர் மீதும், அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் சேகர், சுப்பிரமணியன் மகன் தினகரன், கிருஷ்ணமூர்த்தி மகன் அருண், நல்லான் மகன் ஏழுமலை, வாசுதேவன் மகன் இளங்கோ உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதலை தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் திம்மச்சூர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.