ஊராட்சி துணை தலைவர் உள்பட 15 பேர் மீது வழக்கு


ஊராட்சி துணை தலைவர் உள்பட 15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Jun 2023 12:30 AM IST (Updated: 7 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட ஊராட்சி துணை தலைவர் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே ஜம்புதுரைக்கோட்டை, ஊத்துப்பட்டியில் கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி, சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஒரு தரப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவில் அருகே இருதரப்பினரும் திரண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். ஆனால் ஒரு தரப்பினர் திடீரென்று அங்குள்ள திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் அதிகாரிகள் சமரசம் பேசி அந்த தரப்பினரை கலைந்துபோக செய்தனர். இந்த மறியலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாக ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவராமன் உள்பட 15 பேர் மீது அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story