சேலம் அருகே கல்குவாரிகளில் ரூ.21 கோடிக்கு கல், மண் வெட்டி முறைகேடு 2 தொழில் அதிபர்கள் மீது வழக்குப்பதிவு

சேலம் அருகே கல்குவாரிகளில் அளவீடு செய்ததில் ரூ.21 கோடிக்கு கல், மண் வெட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 தொழில் அதிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
கல்குவாரிகள்
சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி காசிநகரை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவர் மாசிநாயக்கன்பட்டியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரும் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தினார்.
இந்த நிலையில் அவர்கள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டதை விட அதிகளவு இடங்களில் கல் மற்றும் மண் ஆகியவற்றை வெட்டி எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பசுமை தீர்ப்பாயத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து அந்த இடத்தை அளவீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
வழக்குப்பதிவு
அதன்பேரில் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்குவாரிகளில் அளவீடு செய்தனர். பின்னர் இதுகுறித்து மாசிநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரசாத் (வயது 39) அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், காசி விஸ்வநாதன் கொடுக்கப்பட்ட அளவுக்கு மேலாக ரூ.5 கோடியே 53 லட்சத்து 175 அளவில் கல் மற்றும் மண் வெட்டி எடுத்துள்ளார். செல்வகுமார் ரூ.15 கோடியே 50 லட்சத்து 58 ஆயிரத்து 692 அளவில் அதிகளவு கல், மண் ஆகியவற்றை வெட்டி எடுத்துள்ளார். எனவே கல், மண் வெட்டி எடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் தொழில் அதிபர்களான காசி விஸ்வநாதன், செல்வகுமார் ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.