பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
தேனி அருகே பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி அருகே தப்புக்குண்டுவை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 27). இவருக்கும், தாடிச்சேரியை சேர்ந்த ஞானவேல் மகன் விக்னேஷ் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உடல் நலம் சரியில்லாமல் விக்னேஷ் இறந்து விட்டார்.
கணவரின் மருத்துவ செலவுக்காக அவருடைய குடும்பத்தினர் கவுசல்யாவின் 15 பவுன் நகைகளை அடகு வைத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நஷ்டஈடாக ரூ.3 லட்சம் தருவதாகவும், சொத்தில் பங்கு இல்லை என்று கையெழுத்து போடுமாறும் கணவரின் குடும்பத்தினர் மிரட்டுவதாக தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கவுசல்யா புகார் செய்தார். அதன்பேரில் அவருடைய மாமனார் ஞானவேல் மற்றும் ஞானவேலின் மகன் அரவிந்த் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.