சாலை விதிகளை மீறிய 204 பேர் மீது வழக்கு
குமரி மாவட்டத்தில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தியதில் 204 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தியதில் 204 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சோதனை
குமரி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு ஸ்டார்மிங் ஆபரேஷன் நடந்தது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் சாதாரண காவலர் வரை அனைத்து தரப்பு போலீசாரும் இரவு விடிய விடிய பணியில் ஈடுபட்ட னர்.தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜிகளில் சந்தேகப்படும் படியாக யரேனும் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து ஒவ்வொரு லாட்ஜிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகளின் நடமாட்டம் இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்கமாக ஈடுபடும் வாகன சோதனையும் நேற்று தீவிரமாக நடந்தது. அப்போது, சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் வாகனம் ஓட்டிய 204 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், முகத்தை ஸ்கேன் செய்யும் செல்போன் செயலி மூலமும் சந்கேப்படும் நபர்களை போலீசார் ஸ்கேன் செய்தனர்.
14 பேர் கைது
பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நபர்களையும் தேடி தேடி போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் மொத்தம் 6 வாரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படாமல் இருந்த 5 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல சட்ட விரோதமாக மது விற்றது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.மேலும் பழைய கொலை குற்றவாளிகள், தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களும் கண்காணிக்கப்பட்டனர்.