மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு
கோர்ட்டில் இளம்பெண் கூடுதல் வரதட்சணை புகார் தெரிவித்ததை ெதாடர்ந்து மின்வாரிய ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் சூரங்கோட்டை காலனியை சேர்ந்தவர் முருகேசன் மகள் திவ்யாகிருஷ்ணன் (வயது 21). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சேதுபாண்டியன் மகன் மின்வாரியத்தில் மதிப்பீட்டாளராக வேலை பார்க்கும் ரவீந்திரன் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது திவ்யாகிருஷ்ணனுக்கு 26½ பவுன் நகையும், ரவீந்திரனுக்கு 5 பவுன் நகையும், சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுத்தார்களாம். 2 மாதங்கள் குடும்பம் நடத்திய நிலையில் நகைகளை விற்றுவிட்டு மின்வாரியத்தில் வேலை செய்வதால் அந்த தகுதிக்கேற்ப கூடுதலாக நகை போடவில்லை என்று கூறி கொடுமைப்படுத்தி உள்ளனர். சேர்ந்து வாழ வேண்டும் என்றால் மேலும், 50 பவுன் நகையும், ரூ.5 லட்சம் பணமும், காரும் கொண்டுவரவேண்டும் என்று கேட்டு கொடுமைப்படுத்தினார்களாம். இதற்கு அவரது தாய் மற்றும் அக்காள் ஆகியோர் உடந்தையாக இருந்தார்களாம். இதுகுறித்து திவ்யாகிருஷ்ணன் ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் புகார் செய்தார். நீதிபதி உத்தரவின்படி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.