சாலை மறியலில் ஈடுபட்ட 33 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை கொடுப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்தவரும் 6-வது ஊராட்சி மன்ற உறுப்பினருமான அழகேசனை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊராட்சி மன்ற உறுப்பினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆலத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் 30-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைமறியலில் ஈடுபட்டதாக கூறி 33 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஊராட்சி மன்ற உறுப்பினர் அழகேசனை தாக்கியது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் மரியசூசை, அருண் அரவிந்த், விக்னேஷ் உள்பட 5 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மரியசூசை அளித்த புகாரின் பேரில் அழகேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.