மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க தலைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க தலைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் வளவட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் உத்தமராசு (வயது 52). இவர் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க மாவட்ட தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மகா மாரியம்மன் கோவிலில் பூசாரி மணிகண்டன் (52) மற்றும் ஊர் நாட்டாண்மைகளுடன் கோவில் பிரச்சினை சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பூசாரி மணிகண்டன் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அருகே இருந்த உத்தமராசு, பூசாரியை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பூசாரி மணிகண்டன், அவரது மகன் சரண்ராஜ் (28) மற்றும் கார்த்திக் (35), செல்வம் (45) ஆகிய 4 பேரும் சேர்ந்து உத்தமராசுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த உத்தமராசு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.