போலி ஆவணம் மூலம் இறப்பு சான்றிதழ் தயாரித்த 4 பேர் மீது வழக்கு
போலி ஆவணம் மூலம் இறப்பு சான்றிதழ் தயாரித்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் விருச்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 68). இவருடைய உறவினர்கள் கற்பக கண்ணன், கண்ணன், சுந்தரம்மாள், வேலம்மாள். ராமலிங்கம் தாயார் முத்து கருப்பாயி கடந்த 2006-ல் இறந்து விட்டார். இதில் 2005-ல் ராமலிங்கம் தாயார் உயிருடன் இருக்கும் போது, வேலு என்பவருக்கு ஒரு ஏக்கர் 34 சென்ட் நிலத்தை விற்பனை செய்துள்ளார். இது சம்பந்தமாக கற்பக கண்ணன் தரப்பினர் முத்து கருப்பாயி 2003-ல் இறந்ததாக போலியான இறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலம் ராமலிங்கம் நிலத்தை போலியாக விற்று விட்டார். அதில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று கற்பக கண்ணன் தரப்பினர் திருமங்கலம் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் ராமலிங்கம் தனது தாயார் 2006-ல் தான் இறந்து உள்ளார் என்று உண்மையான இறப்புச் சான்றிதழை வைத்து மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கற்பக கண்ணன் தாக்கல் செய்த இறப்புச் சான்றிதழை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போலியான ஆவணம் தயார் செய்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாலுகா போலீஸ் நிலையத்தில் ராமலிங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.